106 நாட்கள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் சிட்னி

அவுஸ்திரேலியாவின் பெரிய நகரமான சிட்னியில் தடுப்பூசி செலுத்தப்படும் வீதம் 70 க அதிகரித்துள்ள நிலையில் 106 நாட்களாக அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

வீட்டினுள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் 5 மில்லியன் சனத்தொகையை கொண்ட துறைமுக நகரில் தளர்த்தப்படுகின்றது.

சுரங்கத்தின் முடிவில் இருக்கும் ஒளியை அண்மிக்கும் தருவாயில் இருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் திங்கள் முதல் மூடப்பட்டிருந்த மதுபானசாலைகள்,உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் கதவுகள் திறக்கப்பட்டு முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் வரவேற்கப்பட உள்ளனர்.

இதேவேளை ஐந்து கிலோமீற்றர் பயணத்தடையும் தளர்த்தப்படுகின்றது.ஆனபோதிலும் மாநில மற்றும் சர்வதேச எல்லைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.

26 மில்லியன் சனத்தொகையை கொண்ட அவுஸ்திரேலியாவில் 1379 கொவிட் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறிருக்கையில் நியூசவுத் வேல்ஸ் திறக்கப்படுவது ஆபத்தானது என சில சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் தொற்றுகள் அதிகரித்து வைத்தியசாலைகளில் நோயாளர்கள் அதிகரிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.