எ கொயட் பிளேஸ் படம் ஒரு உணர்ச்சிக் குவியல்… சிலாகித்த மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஆன்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பிசாசு 2 படம். இதன் முதல் பாகம் வெளியாகி சிறப்பான வெற்றியையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள நிலையில், தற்போது இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிசாசு படக்குழுவினருடன் இயக்குநர் மிஷ்கின் எ கொயட் பிளேஸ் பார்ட் 2 ஹாலிவுட் படத்தை பார்த்து வியந்ததாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த முதல் பாகத்தை பார்த்து வியப்படைந்ததாகவும் இரண்டாவது பாகம் அந்த அளவிற்கு இருக்காது என்று கருதியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் தன்னுடைய கணிப்பை பொய்யாக்கும்வகையில் தற்போது இரண்டாவது பாகம் சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். படம் 100 சதவிகிதம் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் தன்னுடைய இணைந்து படம் பார்த்தவர்கள் அனைவரும் இருக்கையின் நுனியில் அமர்ந்து படத்தை பார்த்ததாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

படத்தின் இயக்குநரும் எழுத்தாளருமான ஜான் கிரஸ்ன்ஸ்கி ஹாலிவுட்டின் மிகச்சிறந்த படைப்பாளி என்றும் மிஷ்கின் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் வேற்றுகிரகவாசிகள் மனித இனத்தை வேட்டையாடும் மெலிதான கதைக்கருவை எடுத்துக் கொண்டு திரைக்கதையில் அவர் மாயம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு திரைக்கதையை அவர் அணுகியுள்ளதாகவும் மிஷ்கின் பாராட்டியுள்ளார். படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இசையமைப்பாளர் மார்கோ மாயம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவரது இசை இதயத்தை வருடுவதாகவும் பயத்தை கூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படம் ஒரு உணர்ச்சிக் குவியல் என்று தெரிவித்துள்ள மிஷ்கின் இத்தகைய படங்களை திரையரங்குகளில் பார்த்தால்தான் அதன் பிரம்மாண்டத்தை உணர முடியும் என்றும் வேற்றுகிரகவாசிகளுடன் நாமும் யுத்தம் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.